போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண் கைது

புதுச்சேரியில் விடுதியில் 12 பவுன் நகை திருடிய வழக்கில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-02-20 18:40 GMT
புதுச்சேரியில் விடுதியில் 12 பவுன் நகை திருடிய வழக்கில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நகை திருட்டு
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி நயம்பாடி குளக்கரை தெருவை சேர்ந்தவர் மாதவி (வயது 42). இவர் புதுவை தன்வந்திரி நகர் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார்.
இவருடன் புதுவை காட்டேரிக்குப்பம் புதுநகரை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் சிவ பிரீத்திகா (21) உள்பட மொத்தம் 4 பேர் தங்கியிருந்தனர். சிவ பிரீத்திகா கடந்த மாதம் பெற்றோருடன் கோபித்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் வந்து தங்கியிருந்தார். இவர் தமிழ்நாடு பெண் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் வருகிற 1-ந் தேதி பயிற்சியில் சேர உள்ளதாக தெரிகிறது.
இளம்பெண் கைது
இந்தநிலையில் மாதவி தனது தங்க சங்கிலி, வளையல், கம்மல் உள்ளிட்ட 12 பவுன் நகைகளை கழற்றி நேற்று முன்தினம் ஒரு பெட்டியில் வைத்துள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது பெட்டியில் இருந்த 12 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாதவி, உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினா். அப்போது மாதவியுடன் தங்கியிருந்த சிவ பிரீத்திகா மீது போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நகையை திருடியதாக ஒப்புக் கொண்டார்.
சிறையில் அடைப்பு
அவர் அளித்த தகவலின்பேரில் குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்திருந்த 10 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் அவர், அடகு வைத்ததாக கூறிய 2 பவுன் நகைளையும் கைப்பற்றினர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு காலாப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். புகார் அளித்த சில மணி நேரங்களில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த போலீசாரை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பாராட்டினார்.

மேலும் செய்திகள்