வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு..!

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2022-02-20 04:31 GMT
சென்னை,

தமிழகத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் நேற்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளுக்கும், நகராட்சிகளில் 3,842 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 820 வார்டுகளுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது.

ஏற்கனவே, 218 வார்டுகளுக்கு போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்வு பெற்ற நிலையில், மீதமுள்ள வார்டுகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் 60.70 சதவீத வாக்குகளும், சென்னையில் 43.59 சதவீத ஓட்டுகளும் பதிவாகி இருந்தன.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டிகளில் வைத்து ‘சீல்' வைக்கப்பட்டன. அதன் பின்னர், அந்தந்த இடங்களுக்கு அருகே இருந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்பாக லாரிகளில் கொண்டுசெல்லப்பட்டு, அங்குள்ள அறையில் வார்டு வாரியாக பெட்டிகளை முறைப்படுத்தி பிரித்து வைத்து, அறைக்கதவுகள் ‘சீல்' வைத்து பூட்டப்பட்டன.

தமிழகம் முழுவதும் உள்ள 268 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பாதுகாப்பாக 15 மண்டலங்களிலும் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன. ஒவ்வொரு அறையிலும் 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மையத்திலும் 150 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் நாளான வரும் 22-ந் தேதி (நாளை மறுதினம்) காலை இந்த அறைக்கதவில் உள்ள ‘சீல்'கள் உடைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் இடத்திற்கு கொண்டுவரப்படும். காலை 8 மணி முதல் வார்டு வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மேலும் செய்திகள்