கோட்டக்குப்பம் நகராட்சியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
கோட்டக்குப்பம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
கோட்டக்குப்பம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதல்முறையாக...
விழுப்புரம் மாவட்டத்தில் நீண்ட ஆண்டுகளாக பேரூராட்சியாக இருந்த கோட்டக்குப்பம் சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியானதற்கு பின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முதன் முறையாக இன்று நடந்தது.
மொத்தம் 27 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், சுயேட்சைகள் என 145 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த நகராட்சியில் ஆண்கள் 11,760, பெண்கள் 12,321, 3-ம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 24,083 வாக்காளர்கள் உள்ளனர்.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் 27 வார்டுகளில் மொத்தம் 28 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் 2 வாக்குசாவடிகள் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கொரோனா வழிகாட்டுதல்கள் படி வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு கிருமிநாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்த பின், கையுறை வழங்கப்பட்டது. இதன்பின் வாக்குச்சாவடிக்குள் ஓட்டுப்போட வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
சில வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். காலையில் விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மதியம் மந்தமாக இருந்தது. பின்னர் மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் விறுவிறுப்பு அடைந்தது.
ஒருசில இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்ததால் சிறிய அளவிலான தகராறுகள் ஏற்பட்டன. இதைதவிர பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.