அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர் போலீசாருடன் மோதல்

அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர் சட்டசபை முன்பு போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-18 18:14 GMT
அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர் சட்டசபை முன்பு போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுக்குழு கூட்டம்
அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பின் 11-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் புதுவை ஜவகர் நகர் சமுதாய நலக்கூடத்தில் இன்று நடந்தது. கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். காரைக்கால் செயலாளர் பிரபு, துணை செயலாளர் அசோக்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். கூட்டத்தில் ஏனாம் செயலாளர் நாகபாபு, துணைத்தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், பொதுப்பணித்துறையில் பணிபுரிகின்ற 1,311 வவுச்சர் ஊழியர்களுக்கு மாதம் 16 நாட்கள் வேலையை 26 நாட்கள் ஆகவும், 30 நாள் சம்பளமும் வழங்க ஆவன செய்யவேண்டும்.
மத்திய அரசின் சட்டக்கூலியான ரூ.786-ஐ நாள் ஒன்றுக்கு அமல்படுத்த வேண்டும். 1,311 நபர்களுக்கும் சீனியாரிட்டி வரையறை செய்து முழுநேர தினக்கூலியாக பணிநிரந்தரம் செய்யவேண்டும்.
தொடர் போராட்டம்
முதல்-அமைச்சர் அறிவிப்பு செய்தபடி ரூ.10 ஆயிரம் சம்பளத்தை முன்தேதியிட்டு வழங்கவேண்டும், உத்தரவினை செயல்படுத்த அதிகாரிகள் தாமதப்படுத்தினால் புதுவை, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த தீர்மானத்தை முதல்-அமைச்சரிடம் வழங்க அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர் இன்று பிற்பகல் சட்டசபைக்கு      வந்தனர்.      100-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்ததால் அவர்களை சட்டசபைக்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர்.
தள்ளுமுள்ளு
தடுப்பு கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும் அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.  இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மட்டும் முதல்-அமைச்சரை சந்தித்து பேச அனுமதி அளித்தனர். அதன்பின் முக்கிய நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
அவர்களிடம் மார்ச் மாதத்துக்குள் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார். அதன் பின்னரே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்