ரங்கசாமியை சந்திக்க திரண்ட சட்டக்கல்லூரி மாணவர்கள்

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க வந்த சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-02-18 12:27 GMT
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்திக்க வந்த  சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்ட கல்லூரி
புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி உள்ளது. இங்கு காலியாக உள்ள முதல்வர், பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த சில தினங்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. 
வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் இல்லாமல் இயங்கும் புதுவை அரசு சட்டக்கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்ப பெறும்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என கேள்வி எழுப்பியது. இதற்கு புதுவை அரசு தரப்பு வக்கீல், கல்லூரியில் காலியாக உள்ள பணி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கூறினார். இதுதொடர்பாக புதுச்சேரி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
மாணவ-மாணவிகள்
இந்தநிலையில் புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் புதுவை சட்டசபை அருகே இன்று காலை திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே சட்டசபை காவலர்கள் நுழைவு வாயிலை இழுத்து மூடினார்கள்.
அப்போது மாணவ-மாணவிகள் அங்கு பணியில் இருந்த போலீசார் மற்றும் சட்டசபை காவலர்களிடம் முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்க வந்திருப்பதாக தெரிவித்தனர். அனைவரையும் சட்டபைக்குள் அனுமதிக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. 
இந்த பிரச்சினை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், மாணவ-மாணவிகளை அனுமதிக்கும்படி கூறினார்.
ரங்கசாமியுடன் சந்திப்பு
அதைத்தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அறையில் மாணவ-மாணவிகள் நேரில் சந்தித்தனர். சட்ட கல்லூரியில் அங்கீகாரம் ரத்து செய்யப்போவதாக தகவல் பரவுகிறது. இதனால் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நூலகம், விடுதி, கேண்டீன், மாணவர்களுக்கு பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவரிடம் வழங்கினார்கள்.
அதனை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி, மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். மேலும் அவர், சட்டக்கல்லூரிக்கு நேரில் வந்து ஆய்வு செய்வதாக கூறினார். அதன்பின் மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இந்த சந்திப்பின்போது அமைச்சர் லட்சுமி நாராயணன் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்