என்னை நம்பி தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்; கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவேன்: மு.க.ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ‘‘என்னை நம்பி தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள்; கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவேன்’’ என்று தேர்தல் பிரசார நிறைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Update: 2022-02-17 18:04 GMT
நிறைவு நாள் பிரசாரம்

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரத்தின் நிறைவு நாளன்று சென்னையில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க.வின் முழக்கம்

10 ஆண்டு காலம் தமிழ்நாட்டையே பாழ்படுத்திய அ.தி.மு.க.வைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் நாடகக் கம்பெனி தி.மு.க.வைப் பார்த்து எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று சொல்வது பூனை கண்ணை மூடிட்டு உலகமே இருட்டாக இருக்கிறது என்று சொல்வதற்கு ஒப்பானது. ‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’ இதுதான் தி.மு.க.வினுடைய முழக்கம். அதன்படித்தான் நடக்கிறோம். எந்நாளும் நடப்போம்.

இன்றைக்கு ஒரு செய்தியை பார்த்தேன். கோவையில் ஸ்டெபன் என்ற ருமேனியா நாட்டைச் சேர்ந்த பயணி, பேருந்தில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்வதைப் பார்த்து இந்தத் திட்டத்தை பற்றியும், தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களைப் பற்றி தன்னுடைய நண்பரான மருத்துவர் கோகுல் என்பவரிடம் கேட்டு தெரிந்து கொண்டு, தி.மு.க.வுக்காக உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு கேட்டிருக்கிறார்.

அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் பயன்

என்னதான், எடப்பாடி பழனிசாமியும் - ஓ.பன்னீர்செல்வமும் ஊர் ஊராகச் சென்று, தங்களுடைய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஏன் என்றால், இந்த அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அதனுடைய பயனை அனுபவிப்பவர்கள் அனைத்து இல்லங்களிலும் இருக்கிறார்கள்.

ஏன், அ.தி.மு.க. தொண்டர்களும் பயன்பெறுகிறார்கள். இதையெல்லாம் அ.தி.மு.க. அரசு நிதிநிலையைச் சீரழித்த நிலையிலும் சாதித்திருக்கிறோம். இப்போது நாம் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டின் நிதிநிலைமையையும் தலைநிமிர வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில்தான் நான் சொன்ன மக்கள் நலத் திட்டங்களை, உதவிகளைத் தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திருக்கிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம், தி.மு.க. அரசு என்பது மக்கள்நலன் காக்கும் அரசு. உங்கள் நலன் காக்கும் அரசு.

விமர்சிக்க அருகதை இல்லை

தி.மு.க. கொள்கை - கோட்பாடுகளைக் கொண்ட இயக்கம். அந்தக் கொள்கைகளை வென்றெடுப்பதற்காக தேர்தலில் இறங்கிய இயக்கம். அந்தக் கொள்கைகளைத் தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்க விரும்பும் இயக்கம். அ.தி.மு.க. போல கொத்தடிமைகளின் கூடாரம் கிடையாது. அந்தக் கொத்தடிமைகள் கூட்டத்துக்கு எங்களை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.

எடப்பாடி பழனிசாமியை நான் கேட்டுக்கொள்வது எல்லாம், முதலில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை எடுத்துப் பாருங்கள். எந்தெந்த வாக்குறுதிகளை எல்லாம் பத்தாண்டுக் காலத்தில் மறந்திருக்கிறீர்கள் என்று பாருங்கள். அதன்பிறகு அடுத்தவர்கள் மேல் குறை சொல்லலாம். அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கத் தயாரா? சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். சொல்லிக் கேட்பதற்கு எந்தச் சாதனையும் இல்லாத காரணத்தால் வேதனைகள் மட்டுமே நிரம்பி இருக்குற காரணத்தால் அதை மறைப்பதற்காகத் தி.மு.க. ஆட்சியைப் பற்றியும்; என்னைப் பற்றியும் அவதூறான குற்றச்சாட்டுகளை; ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு வருகிறார்.

விரக்தியாளர்கள்

நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் வாங்கிய மரண அடிதான் இந்த உள்ளாட்சித் தேர்தலிலும் கிடைக்கப் போகிறது என்று அவருக்கே நன்றாகத் தெரிந்துவிட்டது. அதனால்தான், தொடர் தோல்விகளின் விரக்தியில் உளறிக் கொண்டு இருக்கிறார். இத்தகைய விரக்தியாளர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.

நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாடு முழுக்க உள்ள 12 ஆயிரத்து 825 பதவிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களும்தான் வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால்தான் அது முழுமையான வெற்றியாக மகத்தான வெற்றியாக இருக்கும். சட்டமன்றத்தில் நாம் நிறைவேற்றுகிற நல்ல பல திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகப் போய்ச் சேர வேண்டும். அதற்கு உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக நம்முடைய கையில் இருக்க வேண்டும்.

வாக்குறுதியை காப்பாற்றுவேன்

கருப்பும் சிவப்பும் நம் ரத்தத்தில் ஊறியவை. தி.மு.க.வும், தமிழகமும் நம் இரு கண்கள். இந்த இரண்டுக்கும் நாம் உண்மையாக இருக்கிறோம். அதனால் மக்கள் நம் மீது நம்பிக்கையாக இருக்கிறார்கள். முதல்-அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினை நம்பி வாக்களியுங்கள். ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையோடு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்