மேலதிகாரி ஆய்வுக்கு வந்ததை பார்த்த ரேஷன் கடை ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
பணியிலிருந்த ரேஷன் கடை ஊழியர் மேலதிகாரி ஆய்வுக்கு வருவதை பார்த்ததில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோவில் கிராமத்தை சேர்ந்த பழனி (50) என்பவர் புதுச்சாவடி கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவர் விற்பனை பணியில் ஈடுபட்டிருந்தபோது கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் தீபா ரேஷன் கடைக்கு வருவதை பார்த்த பழனி திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் பழனியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.