ஊழல்வாதிகளை பதவியில் அமர்த்தியதால் தமிழகத்துக்கு சீரழிவு: கமல்ஹாசன்
ஊழல்வாதிகளை பதவியில் அமர்த்தியதால் தமிழகத்துக்கு சீரழிவு ஏற்பட்டுள்ளது என்றும் நல்லவர்களை மக்கள் தூக்கிப்பிடிக்க வேண்டும் எனவும் மதுரை பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசினார்.
மதுரை பிரசாரம்
மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தீவிர பிரசாரம் செய்தார்.
திருப்பரங்குன்றம், அவனியாபுரம், ஜெய்ஹிந்த்புரம், மதுரை பெரியார் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் பிரசார வாகனத்தில் நின்றபடி கமல்ஹாசன் பேசியதாவது:-
மக்கள் கேள்வி
ஒரு மாற்றத்திற்கான வாய்ப்புக்காக உங்கள் முன்பு மக்கள் நீதி மய்யம் நிற்கிறது. இலவசமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை காசு கொடுத்து வாங்குகிறோம். ஆனால் ஆட்சியாளர்கள் அனைத்து இடங்களிலும் கழிவுநீரை இலவசமாக ஓட விட்டிருக்கிறார்கள். சாக்கடையை கூட சரிசெய்ய முடியாதா? இந்த கேள்வியை கூட மக்கள் இதுவரை கேட்காமல் இருந்திருக்கிறீர்கள்.
அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்த வந்த கட்சிதான் மக்கள் நீதி மய்யம்.
நல்லவர்களை...
ஆட்சி செய்தவர்கள், பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றினார்கள். அரசியலை வியாபாரமாக செய்கிறார்கள். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் விரைவில் வரும்.
உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவோம். மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் போராடியாவது நிறைவேற்றுவோம்.
மக்களும் நல்லவர்களை தூக்கிப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லா விஷயத்திற்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகிவிடும். கொள்ளையடிப்பவர்களை, ஊழல் செய்பவர்களை மக்கள் பதவியில் அமர்த்தியதன் காரணமாகத்தான் தமிழகம் இப்படி சீரழிந்துள்ளது. மாற்றத்திற்கான ஏற்பாடுகளை மக்களே செய்ய வேண்டும். அது மக்கள் கையில்தான் உள்ளது.
அரசியல் வியாபாரம்
ஜனநாயகத்தை மக்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கான பலமான ஒரு ஆயுதம்தான் ஓட்டு. அதனை பண்டமாற்று, வியாபாரத்திற்கு பயன்படுத்தி விட வேண்டாம். மற்ற கட்சியினர் கொடுக்கும் ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம், எதுவாக இருந்தாலும் பத்தாது.
ரூ.1 கோடி செலவு செய்து கவுன்சிலர் ஆகிறவர், பதவிக்கு வந்தபின் ரூ.1 கோடியை எடுக்காமல் விடுவாரா?. அதனால், பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். எங்களுக்கு ஓட்டு போடாவிட்டால் கூட பரவாயில்லை. பணம் கொடுப்பவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள். மக்கள் பணம் ஏராளமாக இருக்கிறது. ஆனால், அது திருடர்கள் கையில் கொட்டிக்கிடக்கிறது.
இந்த காட்சிகள் எல்லாம் மாற வேண்டும். நாளை நமதே.
இவ்வாறு அவர் பேசினார்.