அம்பத்தூரில் குழந்தை ‘லாக்டவுனை’ கடத்திய என்ஜினீயர் கைது - தனிப்படை போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
சென்னை அம்பத்தூரில் குழந்தை ‘லாக்டவுனை’ கடத்திய வழக்கில் என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தனிப்படை போலீசாரை ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.
திரு.வி.க.நகர்,
சென்னை அம்பத்தூர் காந்தி நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் (வயது 42) தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் அங்கேயே தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இதில் 1½ வயதான கடைசி ஆண் குழந்தை, கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிறந்ததால் ‘லாக்டவுன்’ என செல்லமாக பெயரிட்டு அழைத்து வந்தனர்.
கடந்த 6-ந்தேதி குழந்தை ‘லாக்டவுன்’ மாயமானது. எங்கு தேடியும் கிடைக்காததால் அம்பத்தூர் போலீசில் கிஷோர் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது அருகில் உள்ள ஏரியில் தவறி விழுந்துவிட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் 9-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் கோயம்பேட்டில் உள்ள ஒரு பஸ்சின் இருக்கையில் குழந்தை ‘லாக்டவுன்’ இருப்பது தெரியவந்தது. மாயமான 3 நாட்களுக்கு பிறகு குழந்தை ‘லாக்டவுன்’ கோயம்பேடு போலீசாரால் மீட்கப்பட்டது. அம்பத்தூரில் மாயமான குழந்தை, கோயம்பேடு பஸ்சில் வந்தது எப்படி? என அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கிஷோர், வேலை செய்யும் அதே அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் வேலை செய்து வந்த என்ஜினீயர் பாலமுருகன் (28) என்பவர் அங்கு கட்டிட வேலை செய்யும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுஷாந்த் பிரதான் (25) என்பவர் உதவியுடன் குழந்தை ‘லாக்டவுனை’ கடத்திச் சென்றது தெரிய வந்தது.
2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் என்ஜினீயர் பாலமுருகன் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
எனது நண்பர்கள் அனைவருக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே நான் குழந்தையை வளர்க்கும் ஆசையில் சுஷாந்த் பிரதான் உதவியுடன் கிஷோரின் குழந்தை ‘லாக்டவுனை’ கடத்திச் சென்றேன்.
கடலூரில் உள்ள எனக்கு தெரிந்த வளர்மதி என்ற பெண்ணிடம் அந்த குழந்தையை சில நாட்கள் வைத்து பார்த்து கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார். அதன்பிறகு என்னால் குழந்தையை பராமரிக்க முடியவில்லை. மறுபுறம் போலீசாரும் குழந்தையை தீவிரமாக தேடி வந்தனர். இதனால் போலீசுக்கு பயந்து போய் கோயம்பேடு பஸ் நிலையத்தில் நின்றிருந்த ஒரு பஸ்சின் இருக்கையில் குழந்தையை வைத்துவிட்டு தப்பிச்சென்று விட்டேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நேற்று மதியம் அம்பத்தூர் இணை கமிஷனர் அலுவலகத்தில் ஆவடி மாநகர ேபாலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆவடி கமிஷனர் அலுவலகம் அமைக்கப்பட்ட பிறகு கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. கடத்தியவர், தான் பணத்துக்காக குழந்தையை கடத்தவில்லை. குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற ஆசையில் கடத்தியதாக கூறினார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் மீட்கப்பட்ட குழந்தை ‘லாக்டவுனை’ அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த ஆவடி கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், குழந்தைக்கு விளையாட்டு பொருட்களையும் பரிசாக வழங்கினார். அவருடன் துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர் கனகராஜ் ஆகியோர் இருந்தனர்.
அத்துடன் குழந்தையை பத்திரமாக மீட்ட இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான 13 பேர் கொண்ட தனிப்படை போலீசாருக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கமும் வழங்கி கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.