சென்னை தம்பதியிடம் கொடுத்தது போல் மற்றொரு சம்பவம் 4 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை பஸ்சில் விட்டுச் சென்ற பெண் அரியாங்குப்பம் காப்பகத்தில் ஒப்படைப்பு
பஸ்சில் விடப்பட்ட பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை அரியாங்குப்பம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரியாங்குப்பம்
பஸ்சில் விடப்பட்ட பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை அரியாங்குப்பம் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை பஸ்சில்...
கடந்த 6-ந்தேதி சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த பஸ்சில் சரஸ்வதி- கிருஷ்ணன் தம்பதியிடம் வாலிபர் ஒருவர் 4 மாத ஆண் குழந்தையை கொடுத்து வைத்து அவர் மாயமான சம்பவம் பரபரப்பானது.
இந்தநிலையில் சிறுநீர் கழிப்பதற்காக இறங்கிய நிலையில் பஸ்சை அவர் தவற விட்டது தெரியவந்து தனது மனைவியுடன் வந்து ஆவணங்களை காட்டி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி காப்பகத்தில் இருந்து அந்த குழந்தையை நேற்று முன்தினம் பெற்றுச் சென்றார்.
இந்த சுவடு மறைவதற்குள் அதே பாணியில் கடந்த சில நாட்களுக்கு முன் மற்றொரு ஆண் குழந்தை பஸ்சில் விடப்பட்ட சம்பவம் தற்போது கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
பஸ்சில் ஏறிய 20 வயது பெண்
திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. தமிழக பகுதியான காட்ராம்பாக்கத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், பச்சிளம் ஆண் குழந்தையுடன் பஸ்சில் ஏறினார்.
பின்னர் அவர் பஸ்சில் அமர்ந்திருந்த செல்வி என்ற பெண்ணிடம் குழந்தையை கொடுத்து விட்டு நின்றபடி பயணம் செய்தார். இதற்கிடையே அந்த பஸ், புதுச்சேரிக்கு வந்தடைந்தது.
புதுச்சேரி இந்திராகாந்தி சிக்னல் பகுதியில் செல்வி இறங்க வேண்டும் என்பதால் குழந்தையை கொடுத்த பெண்ணை தேடினார். ஆனால் அவரை காணவில்லை.
4 நாட்களே ஆன ஆண் குழந்தை
இதனால் செய்வதறியாது திகைத்த செல்வி குழந்தையுடன் இந்திராகாந்தி சிக்னல் பகுதியில் இறங்கினார். பின்னர் அங்கு பணியில் இருந்த பெண் காவலர் நித்யா என்பவரின் உதவியுடன் குழந்தையை உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அது பிறந்து 4 நாட்களே ஆன ஆண் பச்சிளம் குழந்தை என்பதால் பராமரிப்புக்காக அரியாங்குப்பம் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த குழந்தையை பஸ்சில் வந்த இளம்பெண் தவற விட்டாரா? அல்லது தவறான வழியில் பிறந்ததாலோ குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்திலோ தெரிந்தே கொடுத்து விட்டுச் சென்றாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
--------