தமிழ்நாட்டில் 87% பேர் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுள்ளனர் - ஆய்வில் தகவல்
தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 87 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு விவரத்தை மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது.
அதன்படி, மாநிலத்தில் நேற்று 3 ஆயிரத்து 971 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 24 ஆயிரத்து 476 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 77 ஆயிரத்து 607 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 87 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட மொத்தம் 32 ஆயிரத்து 245 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனையில் மொத்தம் 87 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 11 முதல் 18 வயதுடையவர்களில் 68 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பது தெரியவந்துள்ளது.