காவல்துறையினர், ஆளும் கட்சியின் கைப்பாவையாக இருக்கக்கூடாது - எடப்பாடி பழனிசாமி பேச்சு

காவல்துறையினர், ஆளும் கட்சியின் கைப்பாவையாக இருக்கக்கூடாது என்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2022-02-10 08:23 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய சட்டசபை தொகுதிகளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

காவல்துறையினர், ஆளும் கட்சியின் கைப்பாவையாக இருக்கக்கூடாது, அப்படி இருந்தால் அதற்கான பலனை அனுபவிக்க நேரிடும். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக செயல்படும் தமிழ்நாடு காவல்துறை, ஏவல் துறையாக மாறக் கூடாது; கீழே இருக்கும் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்;  மேலே வரும் போது நிலைமை மாறும். திமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் ஒரே கட்சி திமுக தான்.

தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்று இருக்கின்ற ஸ்டாலின், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை. நிறமாறும் கட்சி திமுக. அதிமுக அரசு எதுவும் செய்யவில்லை என பொய் குற்றச்சாட்டை சுமத்துகிறார் மு.க.ஸ்டாலின். நீட் தேர்வு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

2010 டிசம்பர் 27-ம் தேதி நீட் தேர்வு கொண்டுவரப்பட்டபோது, ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி. அப்போது திமுக காங்கிரசோடு கூட்டணியில் இருந்தது. அப்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், இப்போது நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறி வாக்கு சேகரித்து வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

மாணவர்களுக்கு மடிக்கணினி, இலவச சைக்கிள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு. ஆனால் திமுக எவ்வித நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. 

நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என்ற ஸ்டாலினின் பேச்சை கேட்டு பலரும் நகையை அடமானம் வைத்தார்கள். ஆனால், 13 லட்சம் பேருக்கு மட்டுமே தகுதி உள்ளது எனவும், 35 லட்சம் பேருக்கு தகுதியில்லை என்றும் கூறி நிராகரித்துள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கையை நம்பி ஏமந்தி மக்கள், நகையை திருப்ப முடியாமல் அவதிப்படுகின்றனர், வட்டி கட்டி வருகின்றனர்.

அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி மக்களுக்கு விளக்குங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்