நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை - மாநில தேர்தல் ஆணையம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி பொது இடங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான பதாகைகளை வைத்தல், கொடிகளை நாட்டுதல், சின்னங்களை வரைதல், சுவரொட்டிகளை ஒட்டுதல் போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது. இதுதொடர்பான வரைமுறைகளை வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் பின்பற்ற உத்தரவிடப்படுகிறது.
அதாவது எந்தவொரு அரசு வளாகத்தின் சுவர்களிலும் சின்னங்களை வரைதல், சுவரொட்டிகளை ஒட்டுதல், கட்-அவுட்கள், விளம்பர பலகைகள், பதாகைகள், கொடிகள் போன்றவற்றை வைப்பதற்கு அனுமதி கிடையாது. பொதுஇடங்கள் என்பது ஒரு பொது இடத்தில் இருக்கும் அல்லது குறிப்பிட்ட இடத்தை கடந்து செல்லும்போது பொதுமக்களின் பார்வையில் படும் தனியார் இடம், கட்டிடம் ஆகும்.
இத்தகைய இடங்களில் உரிமையாளரின் அனுமதி பெறப்பட்டிருந்தாலும் சுவர் விளம்பரம் செய்வது, சுவரொட்டி ஒட்டுவது போன்றவற்றை மேற்கொள்ளக்கூடாது. இடத்தின் உரிமையாளர் சம்மதம் பெறப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் இதனை அனுமதிக்க முடியாது. இதனை தேர்தல் அலுவலர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.