நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 12,607 பதவியிடங்களுக்கு 57,778 வேட்பாளர்கள் போட்டி - மாநில தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
இதுதவிர பிரதான அரசியல் கட்சிகளில் இடம் கேட்டு கிடைக்காதவர்களும், உள்ளூரில் தங்களுக்கு உள்ள செல்வாக்கு காரணமாகவும் சுயேச்சையாக பலர் களத்தில் இறங்கி உள்ளனர். இதனால் இந்த தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 12,607 பதவியிடங்களுக்கு 57,778 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மாநகராட்சி கவுன்சிலருக்கு - 11,196 பேரும்
நகராட்சி கவுன்சிலருக்கு - 17,922, பேரும்
பேரூராட்சி கவுன்சிலருக்கு - 28,660 பேரும் போட்டியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.