நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. சுயேச்சை களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

Update: 2022-02-08 00:24 GMT
சென்னை,

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.

நேரடி மோதல்

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

74,416 வேட்புமனுக்கள்

இதுதவிர பிரதான அரசியல் கட்சிகளில் இடம் கேட்டு கிடைக்காதவர்களும், உள்ளூரில் தங்களுக்கு உள்ள செல்வாக்கு காரணமாகவும் சுயேச்சையாக பலர் களத்தில் இறங்கி உள்ளனர். இதனால் இந்த தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான 4-ந் தேதி வரை 74 ஆயிரத்து 416 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த 5-ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் பலர் வேட்பு மனுவில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனு பரிசீலனையின் போது இதுபோன்ற நபர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அதே நபர்கள் தாக்கல் செய்த மற்ற மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதிரடியாக இறங்கினர்

இதேபோன்று மாற்று வேட்பாளர்களின் மனுக்களும், பல்வேறு காரணங்களுக்காக அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் பலரின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

நேற்று மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. வார்டு தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் சுயேச்சை வேட்பாளர்களால் சிதறி விடக்கூடாது என்ற நோக்கத்திலும், இதன் காரணமாக வெற்றிவாய்ப்பு கைநழுவி சென்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும் பிரதான அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக களத்தில் நின்ற சுயேச்சை வேட்பாளர்களை வாபஸ் பெற வைப்பதற்கான முயற்சியில் அதிரடியாக இறங்கினர்.

அதேவேளையில் தங்களுக்கு எதிரான வேட்பாளர்கள் அத்தனை பேரையும் வாபஸ் பெற வைத்து அதன் மூலம் போட்டியின்றிதேர்வாக வேண்டும் என்ற அடிப்படையிலும் சிலர் செயல்பட்டனர்.

கடைசி நேரத்தில் வாபஸ்

இதன் காரணமாக சில இடங்களில் சுயேச்சைவேட்பாளர்களும், ஒரு சில இடங்களில் பிரதான அரசியல் கட்சி வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றனர்.

இதன் காரணமாக பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு சிலர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோன்று ஈரோடு மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரும் போட்டியின்றி தேர்வானார்.

இதைத்தொடர்ந்து தேர்தலில் களம் காணும் இறுதி வேட்பாளர்கள் யார், யார்? என்ற பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

பல வார்டுகளில் 20 பேர்

பெரும்பாலான வார்டுகளில் களத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 5 முதல் 15 வரை உள்ளது. பல வார்டுகளில் 20-க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். சில வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க. என 2 பேர் மட்டுமே போட்டி களத்தில் உள்ளனர்.

இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சிகளின் சின்னம் ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு அக்கட்சிகளின் சின்னம் ஒதுக்கப்பட்டது.

சுயேச்சைக்கு 30 சின்னங்கள்

இதுதவிர அங்கீகரிக்கப்படாத கட்சிகளான ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சில கட்சிகள் அவர்கள் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அவர்கள் கேட்ட சின்னத்தை ஒதுக்கீடு செய்தது.

சுயேச்சையாக போட்டியிடுபவர்களுக்காக வைரம், உலக உருண்டை, ஊஞ்சல், தீப்பெட்டி, அலமாரி, அரிக்கேன் விளக்கு, தண்ணீர் குழாய் உள்பட 30 சின்னங்கள் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டிருந்தன.

இதில் இருந்து ஒரு சின்னத்தை சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் தேர்வு செய்தனர். சில இடங்களில் ஒரே சின்னத்தை இருவர் கேட்டதால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சூடுபிடித்த தேர்தல் களம்

அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் பெரும்பாலானோர் வேட்புமனு தாக்கல் செய்ததும் பிரசாரத்தை தொடங்கினர். சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாததால் நேற்று வரை அவர்கள் சின்னத்தை பற்றி குறிப்பிடாமல் வாக்குகளை சேகரித்தனர்.

சுயேச்சைகளுக்கு நேற்று சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

மேலும் செய்திகள்