கருத்தடை சிகிச்சைக்கு பின் பெண் குழந்தை; ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின் பிறந்த பெண் குழந்தைக்கு பட்டப்படிப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.1.20 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-02-05 22:38 GMT

சென்னை,



குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் தனம். இவருக்கு 2 பெண் குழந்தைகள் ஏற்கனவே உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்தவுடன் இவருக்கு ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை 2014-ம் ஆண்டு நடந்தது. இதற்கான சான்றிதழை ஆஸ்பத்திரி நிர்வாகம் வழங்கியது. இந்த நிலையில் மீண்டும் தனம் கர்ப்பம் தரித்தார். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி அவரை பரிசோதித்த கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி டாக்டர்கள், கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டதாக அறிக்கை கொடுத்தனர்.

இதனால், தனக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க கோரி தமிழக அரசுக்கு, தனம் மனு அனுப்பினார். இதற்கிடையே 2017-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி 3-வதாக பெண் குழந்தை அவருக்கு பிறந்தது. இதையடுத்து, தனக்கு ரூ.10 லட்சம் தமிழக அரசு இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி அவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘டாக்டர்களின் கவனக்குறைவால்தான் மனுதாரருக்கு 3-வது குழந்தை பிறந்துள்ளது. எனவே, அவருக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். 3-வது பெண் குழந்தைக்கு அரசு சலுகை கிடையாது. எனவே, அனைத்து சலுகைகளையும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், சில நேரங்களில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வியடையவும் வாய்ப்புள்ளது. இந்த விஷயம் மனுதாரருக்கும் அறுவை சிகிச்சைக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், கர்ப்பமானது தெரிந்தவுடன் வந்திருந்தால் உரிய மருத்துவ சிகிச்சை தரப்பட்டிருக்கும். அதனால், அவர் இழப்பீடு கோர முடியாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த உத்தரவில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தபிறகு மீண்டும் கர்ப்பம் தரிக்காது என்று மனுதாரர் முழுமையாக நம்பியுள்ளார்.

டாக்டர்கள் உரிய முறையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை என்பது தெளிவாகிறது. 3-வது பெண் குழந்தை பிறந்ததால், மனுதாரர் அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்துவைப்பது வரை பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.

டாக்டர்கள் கவனக்குறைவாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டதால்தான் மனுதாரர் 3-வது பெண் குழந்தையை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மனுதாரர் உடனடியாக அணுகவில்லை என்று அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறுவதை ஏற்க முடியாது. 2 பெண் குழந்தைகளுக்கு மட்டும் அரசு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் 3-வது குழந்தைக்கு எப்படி அரசின் சலுகையை பெற முடியும்? அதனால், அந்த குழந்தை தேவையில்லா குழந்தையாகிவிடுகிறது.

தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மனுதாரர் தானாக முன்வந்து தேர்வு செய்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதனால், அவர் இழப்பீடு பெற தகுதியுள்ளவராக இந்த ஐகோர்ட்டு கருதுகிறது. அந்த குழந்தைக்கு 21 வயது ஆகும்வரை உரிய சலுகைகளை வழங்குவது அரசின் கடமையாகும். எனவே, மனுதாரருக்கு தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

மனுதாரரின் 3-வது குழந்தைக்கு 5 வயதாகும்போது அரசு பள்ளியிலோ, தனியார் பள்ளியிலோ அவர் சேர்க்கப்பட்டால் கல்வி செலவு முழுவதையும் அரசு ஏற்க வேண்டும். அதாவது, 21 வயது வரையிலோ அல்லது பட்டப்படிப்பு முடிக்கும் வரையிலோ அந்த குழந்தையின் கல்வி கட்டணம், பாடபுத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்காக மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் கணக்கிட்டு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை அரசு வழங்க வேண்டும். மனுதாரரின் 3-வது குழந்தையையும் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டத்தில் அரசு சேர்க்க வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்