போலி வேலைவாய்ப்பு தகவல்களை நம்பி ஏமாறவேண்டாம்: தென்னக ரெயில்வே துறை எச்சரிக்கை
ரெயில்வே வேலைவாய்ப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தென்னக ரெயில்வே தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
மதுரை,
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரெயில்வேயில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடும் கும்பலின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலியான ரெயில்வே வேலைவாய்ப்பு செய்தி குறித்த தகவல்கள் அதிகளவில் வலம் வரத் தொடங்கியுள்ளன. அதில், பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு ரெயில்வேயில் வேலை, 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது போன்ற தகவல்கள் இடம்பெறுகின்றன.
இதற்கிடையே, சமீபத்தில், ரெயில்வே வாரியம் நடத்திய தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, பீகார் மாநிலத்தில் பெரிய கலவரம் வெடித்தது. ரெயில்வே பணிகளில் சேர விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்கள் மற்றும் இடைத்தரகர்களை நம்பி அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாறுவதாக ரெயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில், ரெயில்வே பணியில் சேர விரும்புபவர்கள் மோசடியாளர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தென்னக ரெயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரெயில்வே பணிகளில் சேர அதிகாரப்பூர்வமாக 21 ரெயில்வே பணியாளர் தேர்வாணையங்கள்(ஆர்.ஆர்.பி.) மற்றும் 16 ரெயில்வே பணியாளர் தேர்வு முகமைகள்(ஆர்.ஆர்.சி.) மூலம் மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது. இவற்றை தவிர வேறு எந்த நிறுவனமும் ஆட்களை தேர்வு செய்வதில்லை. வேலைவாய்ப்புக்கான தேர்வுகள் குறித்து விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ரெயில்வே தேர்வாணையங்களின் இணையதளத்திலும் வெளியிடப்படுகின்றன.
எனவே, ரெயில்வே பணியில் சேருவதற்காக இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாரேனும், ரெயில்வேயில் வேலைவாங்கி தருவதாக கூறி விண்ணப்பதாரர்களில் தொடர்பு கொண்டால் அருகிலுள்ள போலீஸ் நிலையம் அல்லது 044 23213185 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தரலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.