13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் துறைமுக ஊழியர் கைது
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துறைமுக ஊழியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த துறைமுக ஊழியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
தூத்துக்குடியை சேர்ந்தவர் பால்ஜெபகுமார் (வயது 36). இவர், காரைக்கால் தனியார் துறைமுகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதற்காக காரைக்கால் நகர் பகுதியில் வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இந்தநிலையில் இவருக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று அந்த பெண் இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு பால்ஜெபகுமார் சென்றார். பின்னர் வீட்டில் இருந்த அந்த பெண்ணின் 13 வயது மகளுக்கு பால் ஜெபகுமார் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
துறைமுக ஊழியர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சல் போட்டாள். இதில் பயந்து போன பால் ஜெபகுமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார். நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறி அழுதுள்ளாள். இதுகுறித்து சிறுமியின் தாயார் காரைக்கால் நகர போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பால்ஜெபகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.