நீட் தேர்வில் இருந்து காப்பாற்றுங்கள்: உங்கள் போராட்டம் ஆந்திர மாநிலத்திற்காகவும் இருக்க வேண்டும்

நீட் தேர்வு காரணமாக மருத்துவ பட்டப்படிப்பு படிக்க இயலாமல் போய் விட்டது என்றும், உங்கள் போராட்டம் ஆந்திர மாநிலத்திற்காகவும் இருக்க வேண்டுமென்று, ஆந்திர மாநில மாணவர் ஒருவர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2022-02-03 23:06 GMT
சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகம் செல்லும் வழியில், டி.டி.கே.சாலையில், ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் என்.சதீஷ் என்பவர் ‘‘எங்களுக்கு உதவுங்கள்’’ என்ற பதாகையுடன் காத்திருந்தார். அவரை பார்த்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாகனத்தை நிறுத்தி, அந்த மாணவரிடம் பேசினார்.

அப்போது அந்த மாணவர் நீட் தேர்வுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நன்றி தெரிவித்து, தனது ஆதரவை தெரிவித்தார். நீட் தேர்வில் இருந்து காப்பாற்றுங்கள் என்று மு.க.ஸ்டாலினிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நடவடிக்கை

தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடை போடும் நீட் தேர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. பிரதமரை கடந்த ஆண்டு ஜூன் 17-ந்தேதி முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து, நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அளித்தார்.

மேலும், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா செப்டம்பர் 13-ந்தேதி சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை காத்திட தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

நம்பிக்கையுடன் செல்லுங்கள்

இந்தநிலையில், தலைமைச்செயலகம் வரும் வழியில், டி.டி.கே.சாலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் என்.சதீஷ், ‘முதல்-அமைச்சர் உதவுங்கள்’ என்ற பதாகையுடன் சந்தித்து, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதற்கு நன்றி தெரிவித்து, தனது ஆதரவையும் தெரிவித்தார்.

மேலும், தான் ஆந்திர மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வு காரணமாக மருத்துவப் பட்டப்படிப்பு படிக்க இயலாமல் போய்விட்டது, ஆகையால் உங்கள் போராட்டம் ஆந்திர மாநிலத்திற்காகவும் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்மாணவனிடம் நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக, அகில இந்திய அளவிலும் இதற்காகத்தான் குரலை தான் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார். எனவே நம்பிக்கையோடு ஊருக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். அம்மாணவரும், முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்