பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.53 லட்சம் பறிமுதல்
பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.53 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர்,
தீவிர வாகன சோதனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் குரும்பலூர் பேரூராட்சி தேர்தல் பறக்கும் படை அதிகாரியும் தனி தாசில்தாரருமான பழனிசெல்வன் தலைமையில் மருவத்தூர் போலீஸ் ஏட்டுகள் கண்ணன், கீதா ஆகியோர் நேற்று மதியம் பெரம்பலூர்-துறையூர் சாலையில் பாளையம் பஸ் நிறுத்தம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
ஏ.டி.எம். மையம்
அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரூ.53 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தில் இருந்தவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தியதில், வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் அய்யலூரை சேர்ந்த வேலுசாமி (வயது 45) என்பதும், அவருடன் வந்தவர் மேலப்புலியூரை சேர்ந்த சின்னமணி (32) என்பதும் தெரியவந்தது. அவர்கள் பெரம்பலூரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து குரும்பலூரில் உள்ள அந்த வங்கியின் ஏ.டி.எம். மையத்துக்கு பணம் நிரப்ப ரூ.53 லட்சத்தை வாகனத்தில் கொண்டு சென்றது தெரியவந்தது.
கருவூலத்தில் ஒப்படைப்பு
ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தையும், வாகனத்தையும் பறிமுதல் செய்து குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மெர்சியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.