நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மதிமுகவிற்கு பம்பரம் சின்னம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியது
சென்னை,
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
மொத்தம் 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளை நிரப்ப வரும் பிப்ரவரி 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதிமுக, பாமக, பாஜக, அமமுக, தேமுதிக, மநீம மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்துக் களமிறங்குகின்றன. திமுக தரப்பைப் பொறுத்தவரைக் கடந்த 2019 மக்களவை தேர்தல் சமயத்தில் உருவாக்கப்பட்ட கூட்டணியே சட்டசபைத் தேர்தல், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்தது. இப்போதும் கூட அதே கூட்டணி தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தொடருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது.