நள்ளிரவில் வீடு புகுந்து துணிகரம் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

திருபுவனை அருகே நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-12-31 14:34 GMT
திருபுவனை
திருபுவனை அருகே நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்துச் சென்ற மர்மஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வீட்டுக்குள் தூங்கியவர்

திருபுவனை பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் ரமேஷ். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செண்பகவள்ளி (வயது 38). நேற்று  இரவு சாப்பிட்டு விட்டு கணவர் மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் செண்பகவள்ளி தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவில் மர்மநபர் ஒருவர், வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே புகுந்தார். அயர்ந்து தூங்கி கொண்டிருந்த  செண்பகவள்ளி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கசங்கிலியை பறித்தார்.

கத்தியை காட்டி மிரட்டல்

இதனால்  திடுக்கிட்டு எழுந்த செண்பகவள்ளி திருடன்... திருடன்... என கூச்சல் போட்டார். இதைக்கேட்டதும் அருகில் தூங்கி கொண்டிருந்த அவரது கணவர் ரமேஷ், அந்த மர்ம ஆசாமியை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த மர்ம ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி விட்டு அங்குள்ள வாழைத்தோப்பு வழியாக தப்பியோடி விட்டான்.
இதுகுறித்து திருபுவனை போலீஸ் நிலையத்தில் ரமேஷ் புகார் செய்தார். அதன்பேரில் மேற்கு பகுதி   போலீஸ்  சூப்பிரண்டு  ரங்க நாதன்   மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டுக்கு   சென்று  செண்பகவள்ளியிடம் விசாரணை    நடத்தினர்.      தொடர்ந்து  போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
திருபுவனை  பகுதியில் சமீபகாலமாக திருட்டு, வழிப்பறிகள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்