தமிழக கர்நாடக எல்லையில் வாகனங்களை வழிமறித்த யானை; போக்குவரத்து பாதிப்பு

தமிழக-கர்நாடக எல்லையான காரப்பள்ளம் அருகே வாகனங்களை யானை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-12-31 04:34 GMT
தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை சிறுத்தை புலி கரடி செந்நாய் மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வன சாலை வழியாக திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. 

இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம்.

கடந்த சில மாதங்களாக தமிழக-கர்நாடக எல்லை காரப்பள்ளம் அருகே கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை காரப்பள்ளம் வனச்சோதனை சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலைக்கு குட்டியுடன் ஒற்றை யானை அவ்வழியாக வந்த வாகனங்ளை வழிமறைத்தது.பின்னர் அங்கும் இங்கும் சாலையில் உலா வந்தது. 

இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் கர்நாடக தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் யானை வனப்பகுதியில் சென்ற பின்னர் வாகனங்கள் சென்றன. சாலையில் யானைகள் தொடர்ந்து உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை இயக்கிவருகின்றனர்.

மேலும் செய்திகள்