தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை - தஞ்சை விழாவில் மு.க. ஸ்டாலின்
பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கபடும் என தஞ்சை நலத்திட்ட விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 44,525 பயனாளிகளுக்கு ரூ.238 கோடியே 40 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் அவர் ரூ.98 கோடியே 77 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற 90 பணிகளையும், இதேபோல் தஞ்சாவூர், கும்பகோணம், மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் பேரூராட்சிகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என 134 பணிகளுக்கு ரூ 894 கோடியே 56 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து 44 ஆயிரத்து 525 பயனாளிகளுக்கு ரூ.238 கோடியே 40 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், கருணை அடிப்படையில் 6 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
தஞ்சாவூர் என்றாலே காவிரி, காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் நடுவர் மன்றத்தை அமைக்க முதல் முதலில் வலியுறுத்தியவர் கருணாநிதி. காவிரி உரிமையை காப்பாற்றிய இயக்கம் தி.மு.க. காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வைத்தவரும் கலைஞர் தான், தமிழ்நாட்டுக்கு எவ்வளவு காவிரி நீர் வழங்க வேண்டும் என்பதை நிர்ணயித்து அறிவிக்கச் செய்தவரும் கலைஞர் தான்.
ராஜராஜ சோழனோடு தஞ்சை மண்ணையும் பெருமைப்படுத்தியது திமுக அரசு. தஞ்சையை பெருமைபடுத்திய அரசு திமுக அரசு தான்.
கடந்த 2 மாதத்தில் பெறப்பட்ட 48 ஆயிரம் மனுக்களில் 22 ஆயிரம் மனுக்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தீர்வு கண்டுள்ளார்.
கொரோனா தாக்கம் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.