மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மத்திய அரசு அனுமதி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னையில் ரூ.4 கோடி செலவில் நிறுவப்பட்ட மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துளார்.
சென்னை,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் இயங்கும் மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மரபணு பகுப்பாய்வு கூடம் நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கூடத்ததை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூட்டமைப்பு(ஐ.என்.எஸ்.ஏ.சி.ஓ.ஜி) ‘‘கொரோனா மரபணு பகுப்பாய்வு கூடமாக’’ இன்று(நேற்று) அங்கீகரித்துள்ளது.
கொரோனா நோய் தொற்றினை உருவாக்கும் வைரஸ், அதன் மரபணுவில் உண்டாகும் தொடர் மாற்றங்களினால் புதுவகையாக உருமாறி நோய் தொற்றின் தாக்கத்தினை தீவிரப்படுத்துகிறது. உருமாறிய கொரோனா வைரஸ்களை கண்டறிய மரபணு பகுப்பாய்வகம் அவசியமாகும். இத்தகைய மரபணு பகுப்பாய்வகம் எந்த ஒரு மாநில அரசாலும் இதுவரை அமைக்கப்படவில்லை.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் உருமாற்றத்தினை கண்டறிய, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பெங்களூரில் உள்ள ‘இன்ஸ்டெம்’, ஐதராபாத்தில் உள்ள சி.டி.ஐ.டி மற்றும் புனேவில் உள்ள என்.ஐ.வி ஆகிய மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு கொரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டு, பகுப்பாய்வு முடிவுகள் தாமதமாக பெறப்பட்டு வந்தன.
இந்தநிலையில், முதல்-அமைச்சரால் சென்னையில் கொரோனா மரபணு பகுப்பாய்வு கூடம் தொடங்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருந்த நிலையில், இன்று(நேற்று) அதற்குரிய அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே விரைவாக கண்டறிந்து, அதனடிப்படையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா நோயின் தாக்கத்தினை பெருமளவு தடுத்திட முடிவும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.