மாநில அந்தஸ்து பெறுவதை யார் தடுப்பது நாராயணசாமி கேள்வி
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதை யார் தடுப்பது? என்று நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதை யார் தடுப்பது? என்று நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
சிலைக்கு மாலை
காங்கிரஸ் கட்சியின் 137-வது ஆண்டு விழா கொண்டாப்பட்டது. இதையொட்டி புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கட்சிக்கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராய ணசாமி பேசியதாவது:-
ரங்கசாமி புலம்பல்
நாட்டை தற்போது மதவாத சக்திகள் ஆண்டு வருகிறது. மக்களுக்கு பாதுகாப்பாக காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்த பிரதமர் மோடி தற்போது புதுச்சேரியை திரும்பி பார்க்கவில்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் பாலாறும், தேனாறும் ஓடும் என்றார்கள்.
ஆனால் தற்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி புலம்ப ஆரம்பித்துள்ளார். மாநில அந்தஸ்து இல்லாததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார். நாங்கள் இது தொடர்பாக கோர்ட்டில் மேல்முறையீடு செய்து தீர்ப்பு வாங்கியுள்ளோம். அதில் மக்கள் அரசின் முடிவினை மாற்ற கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
யார் தடுப்பது?
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. தேர்தலின்போது மாநில அந்தஸ்து, புதுவை கடன் தள்ளுபடி என்றார்கள். தற்போது அது என்னவாச்சு? வைத்திலிங்கம் எம்.பி. நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு புதுவைக்கு மாநில அந்தஸ்து தரமுடியாது. நிதிக்குழுவில் சேர்க்க முடியாது என்று பதில் அளித்துள்ளது.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, பா.ஜ.க. கூட்டணியில் உள்ளார். அவரது அமைச்சரவையில் 2 பா.ஜ.க. அமைச்சர்கள் உள்ளனர். ஒரு சபாநாயகர் உள்ளார். அப்படியிருக்க மாநில அந்தஸ்து பெறுவதை யார் தடுப்பது? மாநில அந்தஸ்தை ஏன் பெறமுடியவில்லை? இதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். தற்போது அவர் புலம்ப காரணம் என்ன?
கபட நாடகம்
இதையே 5 ஆண்டு காலம் நாங்கள் சொன்னோம். அப்போது ரங்கசாமி எதுவும் சொல்லாமல் மவுனம் காத்தார். நாங்கள் போராடும்போது வேடிக்கை பார்த்தார். தற்போது அது அவரை திருப்பி அடிக்கிறது. இவர்களால் 6 மாதம்கூட தாங்க முடியவில்லை. அவர் கூட்டணியைவிட்டு வெளியே வந்து பேச தயாரா? நாங்கள் தயாராக உள்ளோம். இந்த கபட நாடகத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
மீண்டும் காங்கிரஸ்
விரைவில் பஞ்சாயத்து தேர்தல் வர உள்ளது. அப்போது கூட்டணி இருக்குமோ, இல்லையோ. நாம் கட்சித்தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். பதவி வரும் போகும். வீழ்ச்சி என்பது நிரந்தரமாகாது. புதுவையில் தற்போது ரோடுபோடக்கூட வழியில்லை. அடுத்த ஆண்டு ஜி.எஸ்.டி. இழப்பீடு ரூ.1,400 கோடி வராது. அதை வைத்து எப்படி சமாளிக்கப்போகிறார்?
புதுவையில் காங்கிரஸ் தான் நம்பர் 1 கட்சி. வெற்றி நம் பக்கம். மீண்டும் இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைய நாம் பாடுபட வேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.