3 சுற்றுலா பயணிகள் கைது
கடற்கரையில் ஆபாசமாக நடந்துகொண்ட 3 சுற்றுலா பயணிகளை போலீசாா் கைது செய்தனா்.
ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாட புதுவையில் முகாமிட்டுள்ளனர். இதன் காரணமாக புதுச்சேரி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் புதுவை தலைமை செயலகம் அருகே கடற்கரையில் நேற்று முன்தினம் 3 வாலிபர்கள் நின்றுகொண்டு அந்த வழியாக சென்ற பெண்களை பார்த்து ஆபாசமாக பேசி, சைகைகள் காட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே பெரியகடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பார்த்ததும் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த பிரசாத் (வயது 29), வைசாக் (25), வினீத் (27) என்பதும் புதுவைக்கு சுற்றுலா வந்த இடத்தில் இவ்வாறு நடந்துகொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3பேரும் கைது செய்யப்பட்டனர்.