காவல்துறை தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் தொடர்பான உத்தரவு ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தமிழக உள்துறை, டி.ஜி.பி. உள்ளிட்டோர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
சென்னை,
கல்வித்துறையில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு இணையாக தமிழக காவல் துறையில் சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 558 தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கல்வித்துறை தூய்மைப் பணியாளர்களுக்கு இணையாக காவல்துறை தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக உள்துறை, டி.ஜி.பி. உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, நீதிபதி வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்களில் சிறப்பு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட பணியாளர்கள், பிற துறை பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் கோர முடியாது எனவும், எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை எனவும் வாதிட்டார்.
ஒரே பிரிவைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு, சமமான பணி, சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என பணியாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவல்துறை தூய்மைப் பணியாளர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த மாவட்ட அதிகாரிகளால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிக அடிப்படையில் சிறப்பு காலமுறை ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மாநில அளவில் விண்ணப்பங்கள் வரவேற்று தேர்வு செய்யப்படாமல், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, சம வேலை, சம ஊதியம் கோர முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.