விதவைகளை திருமணம் செய்து மோசடி... கணவர் மீது 6-வது மனைவி பரபரப்பு புகார்

விதவைகளை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக கணவர் மீது 6-வது மனைவி, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளாா். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2021-12-23 11:27 GMT
பெங்களூரு, 

பெங்களூரு தூரவாணி நகரை சேர்ந்தவர் தகசீன் (வயது 32). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக, அவருடன் வாழ பிடிக்காமல் பிரிந்து விட்டார். முதல் கணவரிடம் இருந்து தகசீன் விவாகரத்தும் பெற்றிருந்தார். பின்னர் தனியார் திருமண தகவல் மையம் மூலமாக சையத் என்பவருடன் தகசீனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரும் திருமணத்திற்கு பெண் தேடிவந்திருந்தார். அவர்கள் 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தார்கள்.

பின்னர் சையத்தை திருமணம் செய்ய தகசீன் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 2 பேரும் திருமணம் செய்துகொண்டு இருந்தார்கள். இந்த நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்திடம் தனது கணவர் சையத் மீது தகசீன் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது கணவர் சையத், என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார். எனக்கு விவாகரத்து ஆனது பற்றி கூறிதான் திருமணம் செய்திருந்தேன். திருமணத்திற்கு பின்பு வீடு கட்டவும், தொழில் தொடங்கவும் வரதட்சணை வாங்கி வரும்படி கூறினார். அதன்படி குடும்பத்தினரிடம் இருந்து ரூ.8 லட்சம் வாங்கி கொடுத்தேன். அதன்பிறகும், வரதட்சணை கேட்டு கணவர் சையத் கொடுமைப்படுத்துகிறார். அவரை பற்றி விசாரித்த போது, ஏற்கனவே 5 பெண்களை திருமணம் செய்திருந்தது தெரியவந்தது.

தனியார் திருமண தகவல் மையம் மூலமாக விவாகரத்து ஆன பெண்களை குறி வைத்து, அவர்களை திருமணம் செய்வதை சையத் தொழிலாக வைத்திருந்தார். ஏற்கனவே 5 விதவை பெண்களை ஏமாற்றி அவர் திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பின்பு புதிதாக வீடு கட்ட வேண்டும், தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, அந்த பெண்களிடம் பணம் வாங்கி சையத் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதுபோல், அவருக்கு ஏற்கனவே நடந்திரு்த 5 திருமணங்களை மறைத்து 6-வதாக என்னை திருமணம் செய்ததுடன், வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்துகிறார். இதுபோன்று, விதவை பெண்களை திருமணம் செய்து, அவர்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபடும் சையத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அந்த புகாரின் சையத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண்ணிடம் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் செய்திகள்