விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு-கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி
விசாரணைக்கு ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து கரூர் மகளிர் விரைவு நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.
கரூர், டிச.22
பெண் கற்பழிப்பு
கரூர் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ந் தேதி கரூர் மேட்டூர் பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது 21), கணேஷ் (26) ஆகியோர் கற்பழித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
இந்த நிலையில் இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டராக (பொறுப்பு) இருந்த ஜெகதீசனை நேற்று விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால் அவருக்கு நீதிபதி நசீமா பானு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.
பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிடப்பட்ட இன்ஸ்பெக்டர் தற்போது அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.