என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் நடக்காதது ஏன்
அதிகாரிகள் ஒத்துப்போனாலும் என்ஆர்காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் நடக்காது ஏன் என்று நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரிகள் ஒத்துப்போனாலும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் எதுவும் நடக்காது ஏன்? என்று நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
மீனவர்களை மீட்க...
இலங்கை கடற்படை இந்திய மீனவர்களை சிறைபிடித்து சென்றுள்ளது. இது தொடர் கதையாகி உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது, மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டால் 2 நாட்களில் மீட்டு வந்தோம். அவர்களது படகுகளையும் திரும்பபெற்று கொடுத்தோம். ஆனால் தற்போது மத்திய அரசு நமது மீனவர்களை பற்றி கவலைப்படுவதில்லை. இலங்கை அரசோடு பேசுவதும் இல்லை. மீனவர்களை மீட்டுவர உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய அரசு ஜி.எஸ்.டி. மூலம் மாநில வரி வருவாயை பறித்துக்கொள்வதால், மாநில அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவியேற்றபின் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மத்திய அரசிடம் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவித்த நிவாரணங்களை இன்னும் வழங்கவில்லை. விலைவாசி உயர்வு குறித்தும் கவலை இல்லை. அரசு, கூட்டுறவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. பஞ்சாலைகள் திறக்கப்படவில்லை.
எதுவும் நடக்காதது ஏன்?
மழைநிவாரணம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படாதது குறித்து காரைக்காலை சேர்ந்த ஒருவர் ரங்கசாமியிடம் கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, நான் ராஜா இல்லை. எனக்கு மேலும், கீழும் உள்ளனர் என்று வேதனையுடன் கூறியுள்ளார். இதையே காங்கிரஸ் ஆட்சியிலும் கூறினோம். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரங்கசாமி வாய்மூடி மவுனமாக இருந்தார்.
அதிகாரிகளுடன் ஒத்துப்போக வேண்டும் என்று கூறினார். தற்போது அவர் அதிகாரிகளுடன் ஒத்துப்போயும் அவரது ஆட்சியில் எதுவும் நடக்காதது ஏன்?
அரசின் எந்த அறிவிப்பாக இருந்தாலும் நிதியை ஒதுக்கிவிட்டு அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் இவர் நிதியை ஒதுக்காமல் அறிவிப்பை வெளியிட்டு அதிகாரிகள் மீது பழியை போடுகிறார். முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் மழை நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பியவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் மாமூல்
முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை. அமைச்சர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக்கொள்ளத்தான் ஆர்வம் காட்டுகிறார்கள். மோசமான நிலையில் இருக்கும் சாலைகளை போடுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. அமைச்சர்கள் தொழிற்சாலை அதிபர்களை மிரட்டி மாமூல் கேட்பது, வேண்டியவர்களுக்கு லேபர் காண்டிராக்ட் கேட்பது வாடிக்கையாகிவிட்டது. கரசூர் தொழில் அதிபர்கள், இதுதொடர்பாக என்னிடம் புகார் தெரிவித்தனர்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மாமூல் வசூலிப்பதை தடுத்து நிறுத்தினோம். ஆனால் தற்போது அது தாராளமாக நடக்கிறது. வெடிகுண்டு கலாசாரம் தலைதூக்கி உள்ளது. சட்டம்-ஒழுங்கு கெட்டுள்ளது.
இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.