11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவர் கைது..!
சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி,
சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த சூழலில் தாயுடன் வீட்டில் இருந்த மாணவி, திடீரென தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.
அதில் மாணவி எழுதிய உருக்கமான 3 கடிதங்கள் போலீசாரிடம் சிக்கின. அதில் 2 கடிதங்களில் அவர், “ஆசிரியர்கள், உறவினர்கள் யாரையும் நம்பக்கூடாது. இந்த உலகத்தில் பாதுகாப்பானது, கல்லறையும், தாயின் கருவறையும்தான். பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை” என உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மற்றொரு கடிதத்தை மாணவி எழுதி விட்டு, பின்னர் அதை கிழித்து போட்டு உள்ளார். அதில், முன்னாள் ஆசிரியை ஒருவரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்ததால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு அவரே காரணம் எனவும் அவரது பெயரை குறிப்பிடாமல் எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, மாணவியின் செல்போன் மற்றும் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவன் உட்பட 20 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் ஆபாசமாக குருஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.