15-வது மெகா தடுப்பூசி முகாம்: ஒரே நாளில் 19 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் இன்று நடைபெற்ற 15-வது மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 19.07 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Update: 2021-12-18 16:18 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது. அதன் மூலம் 2 கோடியே 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் 15-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் நடந்தது. இதில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள காலக்கெடு முடிந்தும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 94 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  தமிழகத்தல் நடைபெற்ற, தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

அந்தவகையில் தமிழகம் முழுவதும் 19 லட்சத்து 7 ஆயிரத்து 9 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் 6 லட்சத்து 21 ஆயிரத்து 942 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 12 லட்சத்து 85 ஆயிரத்து 67 பேரும் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர். தமிழகத்தில் இதுவரை 84.26 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 54.73 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.

இதன் மூலம் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 8 கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், நாளை  தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்