நாட்டு வெடி வெடித்து திருச்சி தொழிலாளி உடல் சிதறி பலி

மொபட்டில் எடுத்து சென்றபோது நாட்டு வெடி வெடித்து திருச்சி தொழிலாளி உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-12-15 18:44 GMT
கரூர், 
நாட்டு வெடி வெடித்தது
திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகாவுக்குட்பட்ட மூக்க ரெட்டியபட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 44), சென்டிரிங் தொழிலாளி. இவருடைய மனைவி ஸ்ரீமதி (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 
நேற்று மாலை முருகேசன் தனது மொபட்டில் கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள குளக்காரன்பட்டி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது மொபட்டில் வைத்திருந்த நாட்டு வெடி திடீரென வெடித்து சிதறின.
உடல் சிதறி பலி
இதில், மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகேசன் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாலவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி கரூர் காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் மொபட்டில் வைத்திருந்த நாட்டு வெடி வெப்ப அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியது தெரியவந்தது. 
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும், மொபட்டில் கொண்டு சென்றவை நாட்டு வெடிகுண்டுகளா? அல்லது பாறைகளை உடைக்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளா? என்பது குறித்தும், இவர் வெடிகளை மொபட்டில் எதற்காக எடுத்து சென்றார். இதனை எங்கு கொண்டு சென்றார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்