எனது வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை - தங்கமணி பேட்டி
வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் செல்போன் மட்டுமே எடுத்து சென்றனர் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
அதிமுக ஆட்சியில் மின்வாரியத் துறை அமைச்சராக இருந்த தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரெய்டு நடத்தினார்கள். சென்னையில் மட்டும் 14 இடங்களில் 6 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினார்கள். இதில் கணக்கில் வராத 2.16 கோடி ரூபாய் பணமும், 1, 130 கிலோ கிராம் தங்க நகைகளும், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் , செல்போன் வங்கியின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்குகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
என் வீட்டில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் எதுவும் எடுத்து செல்லவில்லை, செல்போன் மட்டும் தான் எடுத்து சென்றனர்.
பிட்காயினில் முதலீடு என்பது தவறான தகவல், பிட்காயின் என்னவென்றே எனக்கு தெரியாது. எனது வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை.
அதிமுகவை அழிக்கலாம் என நினைக்கிறார்கள், அது முடியாது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் மூலம் அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி.
அதிமுகவை அழிக்கும் நோக்கில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடத்துகிறார்கள். நீதியின் மீது நம்பிக்கை உள்ளது, நிச்சயம் வெற்றி பெறுவேன். எத்தனை சோதனைகள் வந்தாலும், வழக்குகள் பதிவு செய்தாலும் நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.