குரூப் 1 முதன்மைத் தேர்வு மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
குரூப் 1 முதன்மைத் தேர்வு மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
சென்னை,
துணை ஆட்சியர், காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி), வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்தத் தேர்வை, மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு மே 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா பெருந்தொற்று காரணமாகத் தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
இதற்கிடையே, ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான அரசாணையில் சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் அடிப்படையில் முதல்நிலை தேர்வின் முடிவுகள் தயார் செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. முதல்நிலைத் தேர்வு எழுதிய 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேரில், முதன்மைத் தேர்வுக்கு 3,800 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா அறிவித்துள்ளார்.
மேலும் தேர்வு செய்யப்பட்டோருக்கு 2022 மார்ச் 4, 5, 6 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல முதன்மைத் தேர்வுக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள், தங்களின் சான்றிதழ்களைத் தேர்வாணைய இணைய தளத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் கிரண் குராலா அறிவித்துள்ளார். இந்த சான்றிதழ் பதிவேற்றம் டிசம்பர் 12ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வரை நடைபெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.