ஜாதகத்தில் தோஷம்: பெண் கொடுக்க பெற்றோர் மறுப்பு - காதலனுடன் பெண் ஒட்டம்..!
ஜாதகம் பிரித்ததால் காதல் ஜோடி ஒன்று வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டது.
ஒமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஜாதகம் சரியில்லை என்று கூறி பெண் கொடுக்க மறுத்ததால், வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வீசாரெட்டியூரைச் சேர்ந்த ஒருவரும், பொறியியல் பட்டதாரியான சாத்தப்பாடியைச் சேர்ந்த பெண் ஒருவரும் கடந்த 3 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வரவே, இருவருக்கும் ஜாதகம் பார்த்துள்ளனர். அப்போது காதலனின் ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறி பெண் கொடுக்க காதலியின் பெற்றோர் மறுத்ததைத் தொடர்ந்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் அருகே உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
தொடர்ந்து தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று கூறி, புதுமண ஜோடி தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததைத் தொடர்ந்து, இருவரது பெற்றோரையும் அழைத்து போலீசார் சமாதானம் பேசினர். இருப்பினும் பெண் வீட்டார் ஒத்துக் கொள்ளாததால், இருவரும் மேஜர் எனக்கூறி பெண்ணை கணவனோடு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.