பிரதமர் மோடியின் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரம்: டுவிட்டர் நிறுவனம் பதில்
பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு மர்மநபர்கள் சிலரால் இன்று அதிகாலை திடீரென சிறிதுநேரம் ஹேக் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு மர்மநபர்கள் சிலரால் இன்று அதிகாலை திடீரென சிறிதுநேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியா அங்கீகரித்துவிட்டதாக பதிவிடப்பட்டிருந்து பின்னர் அது நீக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் “ பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவி்ட்டர் கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சிறிது நேரத்தில் இந்த விவகாரம் டுவிட்டர் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு் உடனடியாக அந்த கணக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட இந்த சிறிய இடைவெளியில் பதிவிடப்பட்ட விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம், ஒதுக்கிவிடுங்கள்” என தெரிவிக்கப்பட்டது.
டுவிட்டர் பதில்
மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள டுவிட்டர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ பிரதமர் அலுவலகத்துடன் 24 மணி நேரமும் நேரடி தொடர்பு வைத்துள்ளோம். எனவே, ஹேக் செய்யப்பட்ட பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு உடனடியாக பாதுகாக்கப்பட்டது. இந்த குறுகிய நேரத்தில், பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில் வேறு எந்த தாக்கமும் ஏற்படுப்பத்தப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்பது எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார்.