1,353 போலீசார் சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம்.!
தமிழகத்தில் 1,353 போலீசாருக்கு அவர்கள் விருப்பத்தின்படி சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சரின் ‘உங்கள் துறையில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின்கீழ் காவல்துறையில் மாவட்ட, மண்டல அளவில் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பரிசீலனை செய்து தீர்வு கண்டு வருகிறார்.
இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,
‘தமிழகத்தில் 1,353 போலீசாருக்கு அவர்கள் விருப்பத்தின்படி சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் சென்னைக்கு 260 போலீசாரும், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 149 போலீசாரும், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 99 போலீசாரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 96 போலீசாரும், நெல்லை மாவட்டத்துக்கு 86 போலீசாரும், நாமக்கல் மாவட்டத்துக்கு 72 போலீசாரும், சிவகங்கை மாவட்டத்துக்கு 68 போலீசாரும், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 60 போலீசாரும் இடமாறுதல் பெற்றுள்ளனர்.
சென்னை வடக்கு மண்டலத்தில் கடந்த 3-ந் தேதி அன்று 300 போலீசாரிடம் இருந்தும், 8-ந் தேதி அன்று சென்னை மாநகர போலீசார் 760 பேரிடம் இருந்தும் கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) அன்று காலை திருச்சியிலும், மாலையில் மதுரையிலும், 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று கோவையிலும் போலீசார் குறைதீர்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.இதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துகொண்டு போலீசாரிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொள்கிறார்.’
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.