2 வயது குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது

சமூக வலைதளங்கள் மூலம் 96 நாள்களில் ரூ.16 கோடி திரட்டப்பட்டதையடுத்து, சோல்ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து வாங்கப்பட்டது.

Update: 2021-12-11 21:36 GMT
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ஆர்.எம்.எஸ். காலனி அருகே உள்ள சிராஜ்பூர் நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது32). ரெப்கோ வங்கி உதவி மேலாளர். இவரது மனைவி எழிலரசியும் (32) அதே வங்கியில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார்.

இவர்களுடைய 2 வயது மகள் பாரதிக்கு முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோய் இருப்பது கடந்த ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி கண்டறியப்பட்டது. இதனால், பாரதியால் தானாக எழுந்து நடக்க முடியவில்லை. இந்த சிறுமியை பரிசோதித்த பெங்களூரு டாக்டர்கள் ரூ.16 கோடி மதிப்பிலான, சோல்ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே நோயைக் குணப்படுத்த முடியும் என கூறினர்.

இதையடுத்து ஜெகதீஷ்-எழிலரசி தம்பதியினர் சமூக வலைதளங்கள் மூலம் நிதி திரட்ட தொடங்கினர். இதையடுத்து பல்வேறு தன்னார்வலர்களும் பல்வேறு இயக்கங்களை நடத்தி நிதி திரட்டி வழங்கினர். மாவட்ட நிர்வாகமும் தனியாக வங்கி கணக்கை தொடங்கி, ரூ.45 லட்சத்தை திரட்டி அளித்தது.

கடந்த நவம்பர் 16-ந் தேதியுடன் 96 நாள்களில் ரூ.16 கோடி திரட்டப்பட்டதையடுத்து, சோல்ஜென்ஸ்மா என்ற ஊசி மருந்து வாங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாரதிக்கு பெங்களூருவில் டாக்டர் ஆன் ஆக்னஸ் மேத்யூ தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் ஊசியை செலுத்தினர்.

மேலும் செய்திகள்