தமிழகத்தில் இன்று ‘லோக் அதாலத்’ மூலம் 57 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு
தமிழகம் முழுவதும் இன்று ‘லோக் அதாலத்’ மூலம் 57,723 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சென்னை,
சுப்ரீம் கோர்ட்டு முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வரை நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக ஆண்டுக்கு 4 முறை தேசிய அளவிலான ‘லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றம் நாடு முழுவதும் தேசிய சட்டப்பணி ஆணை குழு மூலம் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் 10, ஜூலை 10, செப்டம்பர் 11 ஆகிய தேதிகளில் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. இதையடுத்து 4-வது முறையாக இன்று நாடு முழுவதும் தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. இதில் செக் மோசடி வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு உள்ளிட்ட சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட கோர்ட்டுகளில் 417 அமர்வுகளில் 1.28 லட்சம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் ரூ.388.30 கோடி மதிப்பிலான 57,723 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.