பொரித்த மீன் சாப்பிட்ட 2 குழந்தைகள் வாந்தி, வயிற்றுப்போக்கில் பலி
குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் கஸ்பா பஜார் பகுதியைச் சேர்ந்த அன்சர் - சுரையா தம்பதிக்கு 4 வயதில் ஆப்ரின் என்ற குழந்தையும், 3வயதில் அசன் என்ற குழந்தையும் இருந்தது. கடந்த 7ஆம் தேதி பணிக்கு சென்று வீடு திரும்பிய ஆட்டோ ஓட்டுநரான அன்சர், கடையில் இருந்து பொரித்த மீன்களை வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். அந்த பொறித்த மீனை சாப்பிட்டுவிட்டு, குழந்தைகள் இருவரும் முட்டையும் சாப்பிட்டதாக கூறப்படும் நிலையில், 11 மணிக்கு மேல் இருவருக்கும் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது.
மறுநாள் காலையில் ஆப்ரினையும், அசனையும் தர்ஹாவுக்கு அழைத்துச் சென்று தாயத்து கட்டிவிட்ட அன்சர், அதற்கு பிறகு மருத்துவர்கள் பரிந்துரையின்றி அங்கிருந்த மஹி என்ற மெடிக்கலில் மாத்திரையும், டானிக்கும் வாங்கி வந்து குழந்தைகளுக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
அந்த மாத்திரை மருந்தை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே குழந்தைகள் இருவரும் மயங்கி, சுயநினைவை இழந்துவிட்ட நிலையில், அதற்கு பிறகு தான் தனது ஆட்டோவிலேயே குழந்தைகளை வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அன்சர். அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பெற்ற குழந்தைகள் சடலங்களாக கிடப்பதை கண்டு, அவர்களது தாய் பரிதவிக்கும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது.
பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தைகள் இறப்பிற்கான முழு காரணம் தெரியவரும் என்ற நிலையில், கஸ்பா பஜார் பகுதியில் வீடுவீடாக குடிநீர் மாதிரிகளை எடுத்து சுகாதார பணியாளார்கள் சோதனை செய்து வருகின்றனர்.