யூடியூபர் மாரிதாஸ் கைது; போலீசார் - பா.ஜ.க.வினர் இடையே தள்ளுமுள்ளு
முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்டதாக மதுரையில் யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யபட்டார்.
மதுரை,
முதுகுளத்தூர் மணிகண்டன் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறி மாரிதாசை, மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள யூ ட்யூபர்களில் ஒருவர் மாரிதாஸ். இவர் தனது யூ டியூப் சேனலில் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
போலீசார் அவரை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அதே சமயத்தில், மாரிதாசை கைது செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் பா.ஜ.க.வினரும், மாரிதாசின் ஆதரவாளர்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். அங்கு போலீசார் மற்றும் பா.ஜ.க.வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.
யூடியூப் தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்த கிஷோர் கே சாமி, சாட்டை துரைமுருகன், மதன் உள்ளிட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பா.ஜ.க. மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் சரவணன் கூறியதாவது:-
மாரிதாஸை போலீசார் அத்துமீறி கைது செய்துள்ளனர்; எதற்காக கைது செய்தார்கள் என எந்த தகவலையும் போலீசார் தெரிவிக்கவில்லை என கூறினார்.