திருக்கனூரில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து
கண்டமங்கலம் அருகே தாய், மகள் கொலை எதிரொலியாக திருக்கனூரில் துப்பாக்கியுடன் போலீசார் இரவு ரோந்து சென்றனர்.
கண்டமங்கலம் அருகே தாய், மகள் கொலை எதிரொலியாக திருக்கனூரில் துப்பாக்கியுடன் போலீசார் இரவு ரோந்து சென்றனர்.
தாய், மகள் கொலை
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே கலித்திரம்பட்டு கிராமத்தில் தாய், மகளை கொலை செய்து விட்டு நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அருகில் உள்ள திருக்கனூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சோரப்பட்டு அம்மன் கோவில், வம்புபட்டு அய்யனார் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவத்தில், கலித்திரம்பட்டில் நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய நபர்களே ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
துப்பாக்கியுடன் ரோந்து
இந்த நிலையில் புதுச்சேரி போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலு, காட்டேரிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் கைத்துப்பாக்கி மற்றும் துப்பாக்கிகளுடன் நேற்று இரவு திருக்கனூர் மற்றும் காட்டேரிக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை நிறுத்தி சோதனை நடத்தினர்.
புதுச்சேரி போலீசார் துப்பாக்கியுடன் இரவு ரோந்து சென்றது ரவுடிகள், கொள்ளையர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.