தொழிலாளர் சேமநலநிதியில் ரூ.பல லட்சம் மோசடி
காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவன தொழிலாளர் சேமநல நிதி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டுச்சேரி
காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவன தொழிலாளர் சேமநல நிதி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.
சேமநலநிதியில் முறைகேடு
நாகப்பட்டினம் புத்தூர் சிவன் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் பத்மநாபன். காரைக்கால் நிரவி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் லேபர் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்.
இந்தநிலையில் ஓ.என்.ஜி.சி.யில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு தொழிலாளர் சேமநல நிதிக்கான ஆவணங்களில் முறைகேடு செய்திருப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து இவரது ஒப்பந்தத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு சேமநல நிதி செலுத்தி விட்டதற்கான ஆவணங்களில் அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. ஆவணங்களை அதிகாரிகள் சோதித்ததில் சேமநல நிதிக்கான தொகையை தொழிலாளர்களின் சம்பளத்தில் பத்மநாபன் பிடித்தம் செய்த போதிலும் அதை சேமநல பிரிவுக்கு அனுப்பாமல் மோசடி செய்தது தெரியவந்தது.
பணம் மோசடி
காரைக்கால் நிரவி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திடம் 2.6.2018 முதல் 1.6.2021 வரையிலான லேபர் ஒப்பந்தத்துக்கு பத்மநாபன் குறிப்பிட்ட தொகை ரூ.3 கோடியே 93 லட்சத்து 61 ஆயிரத்து 171 ஆகும். ஒப்பந்தம் பெற்றபின், தொழிலாளர் சேமநல நிதியை ஓ.என்.ஜி.சி.யின் சேலம் பிரிவு சேமநல நிதியகத்துக்கு செலுத்த வேண்டும். 3 வருடங்களுக்கு தொழிலாளர்களின் சம்பளத்தில் சேமநல நிதியை வசூலித்த பத்மநாபன் அதை அலுவலகத்துக்கு செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளார்.
அதேநேரத்தில் சேமநல நிதிக்கு அனுப்பி விட்டதாக போலி பில் தயாரித்து, ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ஒப்பந்தத் தொழிலாளர்கள் இரு தரப்பையும் ஏமாற்றி வந்துள்ளார்.
இதை ஓ.என்.ஜி.சி. விசாரணை அதிகாரி மனோகரன் கண்டுபிடித்தார். இதையடுத்து ஓ.என்.ஜி.சி.யுடனான பத்மநாபனின் ஒப்பந்தத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
கைது
இதுகுறித்து காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவன மின்சாரப்பகிர்வு பிரிவு தலைமைப் பொறியாளர் பி.ராஜசேகரன் போலீசில் புகார் செய்தார். காரைக்கால் தெற்கு போலீஸ் கண்காணிப்பாளர் வீரவல்லபன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் வீரபுத்திரன், தனசேகரன், நிரவி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒப்பந்ததாரர் பத்மநாபனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.