சங்கராபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலை
திருக்கனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலையை பொதுமக்கள் எடுத்து சென்று கோவிலில் வைத்து வழிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருக்கனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் கிடந்த சாமி சிலையை பொதுமக்கள் எடுத்து சென்று கோவிலில் வைத்து வழிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்றில் கிடந்த சாமி சிலை
திருக்கனூர் அருகே உள்ளது குமராபாளையம் கிராமம். இங்குள்ள சங்கராபரணி ஆற்றில் சமீபத்தில் பெய்த கன மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள மேம்பாலத்தை தொட்டவாறு ஆற்றில் வெள்ளம் ஓடியது.
இதற்கிடையில் நேற்று மாலை குமராபாளையம் பெட்ரோல் பங்க் எதிரில் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் கரையோரம் சாமி சிலை ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுமக்கள் வழிபாடு
இதற்கிடையே சாமி சிலை கிடப்பது குறித்த தகவல் பரவியதால் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அந்த சிலையை ஆற்றில் இருந்து எடுத்து தூய்மை செய்து பார்த்தனர். அப்போது அது பெருமாள் சிலை என்பது தெரியவந்தது. பின்னர் பொதுமக்கள் அந்த சிலைக்கு அபிஷேகம் செய்தனர்.
இதையடுத்து அந்த சிலையை பொதுமக்கள் அங்குள்ள காளி கோவிலில் வைத்து வழிபட்டனர். இந்த சிலை ஆற்றங்கரையோரம் எப்படி வந்தது என யாருக்கும் தெரியவில்லை. சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏதேனும் கிராமத்தின் கோவிலில் இருந்த சிலை ஆற்றில் அடித்து வரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.