பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து நகை பறிப்பு
திருபுவனையில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 3 பவுன் நகையை பறித்து சென்றனர். மேலும் 3 வீடுகளில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
திருபுவனையில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து 3 பவுன் நகையை பறித்து சென்றனர். மேலும் 3 வீடுகளில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
குழந்தை பிறந்தது
திருபுவனை இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 65). இளநீர் வியாபாரி. இவரது மனைவி வசந்தா. இவர்களது மகள் செல்வகுமாரி (23).
இவருக்கும், லாஸ்பேட்டையை சேர்ந்த அய்யப்பன் (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. செல்வகுமாரிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவர் குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்தார்.
கத்தியை வைத்து நகை பறிப்பு
நேற்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தைக்கு பால் வாங்குவதற்காக துரைராஜ் வெளியில் சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் திடீரென வீட்டுக்குள் அத்துமீறி புகுந்தனர். பின்னர் உறங்கி கொண்டிருந்த செல்வகுமாரியின் கழுத்தில் கத்தியை வைத்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமாரி, அவரது தாயார் வசந்தா ஆகியோர் கூச்சல் போட்டனர். ஆனால் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பியோடி விட்டனர்.
3 வீடுகளில் கைவரிசை
இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த ராஜேஸ்கண்ணா (38), ஜெயக்குமார் (29) ஆகியோரின் வீட்டின் பூட்டையும் கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இதுமட்டுமன்றி திருபுவனை பெரியபேட் அம்பேத்கர் வீதியை சேர்ந்த அமுதா (28) என்ற பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். ஆனால் அங்கு பணம், பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து திருபுவனை போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் மேற்கு போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமாரவேலு, அஜய்குமார், குற்றவியல் போலீசார் வீரபாகு, பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
வீடுகளை உடைக்க பயன்படுத்திய கடப்பாரைகளை போலீசார் கைப்பற்றினர். இந்த கொள்ளை சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.