கஞ்சாவை சட்ட ரீதியாக விற்பனை செய்வீர்களா ? அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடினால் புதுச்சேரிக்கு செல்வதும், இந்தியாவில் மதுவை தடை செய்தால் வெளிநாட்டிற்கும் செல்வார்கள் என நீதிபதி விமர்சித்தார்.

Update: 2021-12-02 09:58 GMT
மதுரை ,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கலாவதி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கல்லூத்து கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என  குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனுவானது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வேலுமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் போலி மதுபான விற்பனை நடைபெறுவதால் அங்கு டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், போலியாக கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தால், கஞ்சாவை சட்ட ரீதியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா? என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில் மதுக்கடைகள் மூடினால் புதுச்சேரிக்கு செல்வதும், இந்தியாவில் மதுவை தடை செய்தால் வெளிநாட்டிற்கும்  செல்வார்கள் என விமர்சித்தார். 

தொடர்ந்து, கல்லூத்து கிராம மக்களின் மனுவை பிரிசீலித்து, அதன் அடிப்படையில் டாஸ்மாக் கடை அமைப்பது குறித்து முடிவு எடுக்கவும், டாஸ்மாக் கடை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் வரும் 20 ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்