பள்ளிவாசல்கள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு, முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை
ரமலான் மாதத்தில் சிறப்பு தொழுகை மேற்கொள்ள பள்ளிவாசல்கள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக (த.ம.மு.க.) தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை (சனிக்கிழமை) முதல் அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புனித ரமலான் மாதம் வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த கட்டுப்பாடு காரணமாக ரமலான் மாத இரவு தொழுகையை முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாத சூழல் உருவாகும். கடந்த ஆண்டு முழு ஊரடங்கில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டதால், புனித ரமலானில் தராவீஹ் எனப்படும் இரவுநேர தொழுகையை பள்ளிவாசல்களில் நிறைவேற்ற முடியாமல் முஸ்லிம்கள் கவலைப்பட்டனர். எனவே, புனித மாதமான ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்கள் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சி அளித்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
14-ந் தேதியில் இருந்து இஸ்லாமியர்களுக்கு புனித ரமலான் மாதம் தொடங்குகிறது. அப்போது அதிகமாக இரவு நேர வணக்க வழிபாட்டில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள்.
எனவே மத நிகழ்வுகளுக்கு தடை தொடங்கும் இரவு 8 மணி என்பதை இரவு 10 மணி என்று மாற்றி அறிவிக்க வேண்டும். இது ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற உதவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில பொதுச்செயலாளர் ஏ.முகைதீன் அப்துல்காதர், முஸ்லிம் மக்கள் கழக தலைவர் ஏ.கே.தாஜூதீன் உள்பட முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் பலரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.