திமுக தலைவர் ஸ்டாலின் வரும் 23ம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார்

கிராம சபை கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நேரடியாக கலந்துரையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-12-20 06:13 GMT
சென்னை,

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சரும் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தை தொடங்கிய முதல் நாளிலேயே அதிரடியாக குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளார்.

முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.  இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

வரும் 23-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 10-ஆம் தேதி வரை மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று சென்னையில் நடைபெற்று வரும் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர்  மேலும் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  திமுக ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்கவுள்ளார் என்றார்.

மேலும் செய்திகள்